வெள்ளி, 29 ஜனவரி, 2010

பயம்......

எதைப் படித்தாலும் அதனூடாக பரவியிருக்கும் பயம்தான் கண்ணில் படுகிறது. எத்தனை விதமான பயங்களினால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். தெனாலி படத்தில் கமல் பயம் பற்றி அடுக்கடுக்காய் பேசின மொழிகள், சற்றே வியப்பையும் சேர்த்து கொடுத்தது. வாழத்துடிக்கிற பயம், வாழமுடியா பயம், வாழ்க்கை மேலும் பயம்......




பயமில்லாது எந்த நொடியேனும் நகர்கிறதா என யோசித்தால் .....மேலோட்டமாய் பார்த்தால் அப்படியொன்றும் நான் பயந்து சாவதில்லை என்று உடனே சொல்லிவிடலாம். நின்று நகர்கிற அந்த ஒரு நொடிக்காலத்தின் மன நிகழ்வுகளை கொஞ்சம் அழுத்தமாய் ஆராய்ந்தால், சில துடிப்புகளும், அழுக்குகளும் பயங்களின் விளைவாக தன்னை உருமாற்றிக்கொண்டிருப்பதை காண முடியும்.



கோபத்தின் காரணம்,

வெறுப்பின் காரணம்,

வன்மத்தின் காரணம்,

அன்பின் காரணம்,

விட்டுக்கொடுத்தலின் காரணம்,

கலவியின் காரணம்,

கல்வியின் காரணம்,

செல்வத்தின் காரணம்,

அதிகார காரணம்,

வாழ்வின் காரணம்

உயிரின் காரணம் ............................................பயம் !!!!



பயம் மற்றும் அதன் விளைவான வாழ்வை நடத்தும் ஆசை (புத்தர் சொல்லியது போல ) ..........எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் ஆகிறது.

அது அழிவுக்கு மட்டும் காரணமாவதில்லை. ஆக்கம் என்று கருதப்படுகிற விளைவுகளுக்கும் அதுவே காரணம்.

பொதுவாக அனைத்து நிகழ்வுகளும் பயம் என்ற விதையால்/விதியால் உருவாகின்றன. விவாதத்துக்காக அது அப்படியில்லை என்று ஆய்ந்து பார்த்தாலும் மீண்டும் அக்கண்ணி பயம் என்ற புள்ளியிலேயே முடிகிறது. பயம் என்பது மரண பயம் என்பதாக மட்டும் அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. மேற்சொன்னது போல், எல்லா கோடுகளும் பயம் என்ற புள்ளியில் துவங்கி, அதிலேயே முடிவுரவும் செய்கின்றன.



பயத்தால் வரையப்பட்ட இக்கோட்டை விலகி நடப்பது சாத்தியமானால்..........................எல்லோராலும் சொல்லப்பட்ட நிரந்தர மகிழ்ச்சி சாத்தியமாகக்கூடும்.



ஒவ்வொரு நொடியின் மீதும் விசாரணை வைக்கிறேன்.

அது நான் பயம், பயம் என்கிறது.

பயமா வாழ்க்கை? கேள்வி வந்தது

பயத்தைப் பார்த்தும் பயம் !

கேவலம் மனிதம் !.

துணைக்கு கடவுள் !

எத்தனை விலைகள் !

பந்து சிதறும் !



வீசிப்போட்ட பந்தோடு எல்லோரின் பயங்களும் பயணிக்கின்றன.

சிறப்பாய் பிறந்த மனிதமும் அதனூடே !



சாந்தினி

1 கருத்து: