வெள்ளி, 29 ஜனவரி, 2010

பயம்......

எதைப் படித்தாலும் அதனூடாக பரவியிருக்கும் பயம்தான் கண்ணில் படுகிறது. எத்தனை விதமான பயங்களினால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். தெனாலி படத்தில் கமல் பயம் பற்றி அடுக்கடுக்காய் பேசின மொழிகள், சற்றே வியப்பையும் சேர்த்து கொடுத்தது. வாழத்துடிக்கிற பயம், வாழமுடியா பயம், வாழ்க்கை மேலும் பயம்......




பயமில்லாது எந்த நொடியேனும் நகர்கிறதா என யோசித்தால் .....மேலோட்டமாய் பார்த்தால் அப்படியொன்றும் நான் பயந்து சாவதில்லை என்று உடனே சொல்லிவிடலாம். நின்று நகர்கிற அந்த ஒரு நொடிக்காலத்தின் மன நிகழ்வுகளை கொஞ்சம் அழுத்தமாய் ஆராய்ந்தால், சில துடிப்புகளும், அழுக்குகளும் பயங்களின் விளைவாக தன்னை உருமாற்றிக்கொண்டிருப்பதை காண முடியும்.



கோபத்தின் காரணம்,

வெறுப்பின் காரணம்,

வன்மத்தின் காரணம்,

அன்பின் காரணம்,

விட்டுக்கொடுத்தலின் காரணம்,

கலவியின் காரணம்,

கல்வியின் காரணம்,

செல்வத்தின் காரணம்,

அதிகார காரணம்,

வாழ்வின் காரணம்

உயிரின் காரணம் ............................................பயம் !!!!



பயம் மற்றும் அதன் விளைவான வாழ்வை நடத்தும் ஆசை (புத்தர் சொல்லியது போல ) ..........எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் ஆகிறது.

அது அழிவுக்கு மட்டும் காரணமாவதில்லை. ஆக்கம் என்று கருதப்படுகிற விளைவுகளுக்கும் அதுவே காரணம்.

பொதுவாக அனைத்து நிகழ்வுகளும் பயம் என்ற விதையால்/விதியால் உருவாகின்றன. விவாதத்துக்காக அது அப்படியில்லை என்று ஆய்ந்து பார்த்தாலும் மீண்டும் அக்கண்ணி பயம் என்ற புள்ளியிலேயே முடிகிறது. பயம் என்பது மரண பயம் என்பதாக மட்டும் அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. மேற்சொன்னது போல், எல்லா கோடுகளும் பயம் என்ற புள்ளியில் துவங்கி, அதிலேயே முடிவுரவும் செய்கின்றன.



பயத்தால் வரையப்பட்ட இக்கோட்டை விலகி நடப்பது சாத்தியமானால்..........................எல்லோராலும் சொல்லப்பட்ட நிரந்தர மகிழ்ச்சி சாத்தியமாகக்கூடும்.



ஒவ்வொரு நொடியின் மீதும் விசாரணை வைக்கிறேன்.

அது நான் பயம், பயம் என்கிறது.

பயமா வாழ்க்கை? கேள்வி வந்தது

பயத்தைப் பார்த்தும் பயம் !

கேவலம் மனிதம் !.

துணைக்கு கடவுள் !

எத்தனை விலைகள் !

பந்து சிதறும் !



வீசிப்போட்ட பந்தோடு எல்லோரின் பயங்களும் பயணிக்கின்றன.

சிறப்பாய் பிறந்த மனிதமும் அதனூடே !



சாந்தினி

சாத்தானின் வேதங்கள்

சொல்வது சாத்தானா கடவுளா என்பது வாசகனுக்கு தெரிந்தே ஆகவேண்டியதிருக்கிறது.

படித்து படித்து எழுத்தாளனை ஒரு வாசகன் புரிந்து கொள்ள துவங்குகிறான்.

சொல்கிறபடியே எழுத்தாளன் வாழ்கிறானா என அடுத்த நிலையில் ஆராய்கிறான்

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பிருந்தால் வாசிப்பு தொடர்கிறது

தொடர்பில்லையென உணர்ந்தால் வாசிப்பு அறுகிறது.

வேதத்தை கடவுள் சொன்னால் மட்டுமே மனம் ஏற்றுக்கொள்கிறது !

சாத்தான் சொல்கிற வேதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.

வேதம் சொல்ல ஆசைப்பட்டால் முதலில் கடவுளாகவேண்டும்.



--

திங்கள், 25 ஜனவரி, 2010

என் கணவன்

இத்தனைநாள் தொலைத்துவிட்டு இன்றென்னை கண்டுகொண்டான் !


என் பெற்றோர் இவனுக்கு நானென்று எழுதவில்லை

பேசி காதல் வர தோழிகளும் முயலவில்லை

தன்னைப்பற்றி தான் சொல்லி இவன் காதல் வலை வீசவில்லை

கண் உகுத்து நின்ற போதும் நேசக்கரம் கொடுக்கவில்லை

கேள்விகள் வந்தபோது பதில் தேடி தரவில்லை

குலைந்துபோனபோது கட்டி அணைக்கவில்லை !!



ஆயினும்....

இத்தனைநாள் தொலைத்துவிட்டு இன்றென்னை கண்டுகொண்டான் !


வாலிப மயக்கத்தில் இவனிருப்பிடம் அறியவில்லை

கருத்து கலக்கத்தில் இவனிருப்பதும் தெரியவில்லை

காதலும் நட்புமாய் அறிமுகம் தேடவில்லை

அறிவிளக்கு ஏந்திக்கொண்டு தேடித்திரியவில்லை

காமம் பொங்கிவர காமன் வசம் நானும் இல்லை

எல்லாம் கிட்டிவிட்ட எக்களிப்பும் எனக்கு இல்லை



ஆயினும்....

இத்தனைநாள் தொலைத்துவிட்டு இன்றென்னை கண்டுகொண்டான் !



( கண்கண்டதெய்வமாய் கணவன் அமையாதபோது தெய்வமே கணவனாகிறான் )

வாழ்க்கை பேரங்கள்

மகள் : அப்பா நான் மேலே படிக்க வேண்டும் !


தந்தை : சொத்து கிடையாது! சம்மதமா ?



மகன் : பிசினெஸ் செய்ய பணம் வேண்டும்

தாய், தந்தையிடம் : காலம் பூரா காப்பாத்தப்போறவன், கேட்டதை கொடுங்க!



கணவன் : மல்லிகை, அல்வா ...ராத்திரிக்கு ....

மனைவி : ம்ம்ம்ம் ...



மனைவி : வாய்க்கு ருசியாய் சமையல், கைக்கு ......

கணவன் : சரி சரி... நாளைக்கு கடைக்கு போகலாம்.



கணவன் : கஷ்டப்பட்டு வேலை ....

மனைவி : நாள்பூரா வேலை ......



கணவன் : நண்பர் குழந்தைக்கு என்ன பரிசு வாங்கலாம்?

மனைவி : நம் மகனுக்கு இது வாங்கி வந்தார்கள்.



கடவுளிடம் : மொட்டை அடிக்கிறேன், எனக்கு இது வேண்டும்.

கோயில் சுற்றுகிறேன், எனக்கு அது வேண்டும்.



குழந்தையிடம் : ஒழுங்காயிரு, மிட்டாய் தருகிறேன் !

சொல்பேச்சு கேள் , சொத்து தருகிறேன் !





ஒழுக்கம் உயர்வு தரும்.

கடின உழைப்பு காசு தரும்.

மனித நேயம் புகழ் தரும்.

தருமம் தலை காக்கும்.

வினைகள், விளைவுகள்

வாழ்க்கையின் பேரங்கள் !

வெள்ளி, 22 ஜனவரி, 2010

வண்ணங்கள்

அழகழகாய் எத்தனை வண்ணங்கள்


இனி வனமாய்

பெரு வெளியாய்

சுடு மணலாய்

கடு மலையாய்

வெண் முகிலாய்

நீல் வானாய்

கருங்கடலாய்

உறை பனியாய்

நண் பகலாய்

கும்மிருட்டாய் ......................





நீரும் நெருப்பும் காற்றும் மண்ணும் வானும்

கலந்து தீட்டிய அத்தனை வண்ணங்கள் !

புல்லாய் செடியாய்

கொடியாய் மரமாய் ....இனிய வண்ணங்கள் !

முகிலாய், மழையாய்

கடலாய், கண்ணீராய் ....மின்னும் வண்ணங்கள் !

விளக்காய் நெருப்பாய்

அழிவாய், ஆக்கமாய் ......சுடுகின்ற வண்ணங்கள் !

காற்றாய், புயலாய்

உயிராய் ஓட்டமாய் .....ஆடும் வண்ணங்கள் !

மணலாய் பாறையாய்

உடலாய் பொருளாய் ....நிலைத்த வண்ணங்கள் !

சுகமாய் வலியாய்

வெளியாய் உணர்வாய் ....பரந்த வண்ணங்கள் !



பிறந்தேன் வளர்ந்தேன்

பார்த்தேன் ரசித்தேன்

நுகர்ந்தேன் உணர்ந்தேன்

பயந்தேன் வியந்தேன் !



ஓடி ஓடிப் பார்த்ததெல்லாம் அலுத்துப்போகுது

தேடி தேடி சேர்த்ததெல்லாம் அழிஞ்சு போகுது

வாடி வாடி நின்றதெல்லாம் மறைஞ்சு போகுது

போற வழி தேடி மனம் குமைஞ்சு போகுது !



எத்தனை மலைய பாத்தாச்சு; எல்லாம் உசரம்

எத்தனை ஆத்தை பாத்தாச்சு: எல்லாம் தண்ணி

எத்தனை கல்லு பாத்தாச்சு ; எல்லாம் பூமி

எத்தனை கட்டடம் பாத்தாச்சு: எல்லாம் காத்து

எத்தனை செடிக பாத்தாச்சு; எல்லாம் நிறம்தான்

எத்தனை உயிரை பாத்தாச்சு: எல்லாம் ஆசை





பள்ளத்தாக்கும் பாத்தாச்சு

பாலைவனமும் பாத்தாச்சு

கொளுத்தும் வெயிலும் பாத்தாச்சு

குளுரும் பணியும் பாத்தாச்சு



பாளுங்கடவுள் பண்ணிப்போட்ட

பார்வைக்கேத்து பாத்தாச்சு !



சின்னக்குட்டி சிங்காரமாய்

கலைச்சுப்போட்ட புழுதி போல

கெடக்குது ஆகாசம் !

கண்ணைமூடி தொறக்கங்காட்டி

அடங்குது ஆகாசம் !



என்னென்னமோ பாத்திருக்கு

எத்தனையோ புரிஞ்சிருக்கு

நாள வரை பொளுதோட்ட

அர்த்தம் மட்டும் வெளங்க வில்ல !



அர்த்தம் ஒன்னும் வெளங்காம

வெந்தத தின்னு

விதி வந்து போறதுக்கு

மனசு கொஞ்சம் ஒப்பவில்ல !



ஏதேதோ படிச்சிருக்கு

சில விஷயம் புரிஞ்சிருக்கு

புடிச்சிருந்த நெனப்பிருக்கு

நெனப்புக்கு கேடு காலம்

எப்பவுமே வந்திருக்கு !



மண்ணு மண்ணா உருண்டை !

பாக்குற பக்கமெல்லாம் !

பாதி வெந்து பாதி வேகாம !

வெந்து போன சின்ன உருண்டைக்கு

எத்தனை பூச்சி புழு !

பிடிக்கிறது

மற்றவர்க்கு ஒரு முறை பிடித்தால் எனக்கு நூறு முறை !


மற்றவர் ஒரு முறை ரசித்தால் நான் நூறு முறை !



எனக்கு என்னவோ எல்லாம் பிடிக்கிறது.

எனக்கு பிடித்ததும் பிடிக்கிறது

பிறருக்கு பிடித்ததும் பிடிக்கிறது

பிறருக்கு பிடிக்காததும் பிடிக்கிறது

எனக்கே பிடிக்காததும்,

எனக்கு பிடிக்கிறது !



எல்லாவற்றிலும் மிளிரும் ஆழ்ந்த அழகு என் கண்ணில் மட்டும் எப்படியோ பட்டு விடுகிறது. பார்ப்பதெல்லாம் அழகு. அழகு அழகு அழகு !!!

வெளியே தெரியும் அழகைதாண்டி உள்ளே மிளிரும் ஆற்றல் அல்லவா அழகாய் தெரிகிறது !!!ஆற்றல் தாண்டி அதனுள் இருக்கும் தெய்வதம் அல்லவா மனதுள் தெரிகிறது



தனக்குள் உறிஞ்சப்பார்க்கும் இயற்கையின் கைகள் என்னை தழுவுகிறது !

தழுவும் கைகள் அணைக்க சூட்சும கைகள் நீளுகிறது

மண்ணில் கரைந்து போக மனம் வேண்டி நிற்கிறது !!

--

ஆனந்தம்

துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !



அருவாய் வருவாய் துகளே !

கருவில் தெரிவாய் துகளே !

பருவில் அறிவார் துகளே !

சுறுவில் மறைவார் துகளே !



துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !





கண்ணில் சிரிக்கும் துகளே !

என்றும் இருக்கும் துகளே !

வண்ணம் காட்டும் துகளே !

எண்ணம் சொல்லும் துகளே !



துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !



உன்னை அறிந்தேன் துகளே !

உயிரை உணர்ந்தேன் துகளே !

அங்கும் எங்கும் துகளே !

ஆனந்தமாவது துகளே !



துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !



(கட துகள் என்பது " God's particle". கடக்கும் துகள், கடத்தும் துகள், கடவுள் துகள் என விளக்கம் பிரியும்)



சாந்தினி

ஆங்காரம்

எனக்குள் ஆங்காரம் தினம் தினம் உறுமுகிறது

சொல்லிப்போ! எனக்கு சொல்லிப்போ !

எத்தனை கால கண்ணாமூச்சி ?

ஆடிக்களைத்து விட்டேன் !

கடவுளோ அல்லது கடவுளின் துகளோ

யாராயிருப்பினும் ...

என் இருப்பின் இயல்பினை உரைத்துப்போ !

எத்தனை முறை கேட்பது ?

அன்பும் அறிவும்

போட்டிபோட்டு கைவிரிக்கிறது



படைப்பை செய்து

அதில் குழப்பம் செய்ய

யாருனக்கு கற்றுக்கொடுத்தது ?

ஜெயிக்கச்சொல்லி

தோற்கடிக்க

யாருனக்கு உரிமை கொடுத்தது ?



ஆங்காரம் வைத்து,

அடிக்கவும் செய்கிறாய்..



இப்போது வலிக்கிறது !

துளியாய் துவள்கிறது !



ஒளிந்தாடும் வாலியே

உன்னை ஜெயிக்க மீண்டும் வருவேன் !

அதுவரை தோல்வியில் திளைப்பேன் !

திங்கள், 11 ஜனவரி, 2010

எங்கே கடவுள் ?

கலாச்சாரம், கல்லில் கடவுளைக்காண கற்றுக்கொடுத்தது.
பிரார்த்தனை, கல்லான கடவுளை சந்தேகித்தது.
கல்வி, கடவுளின்  இருப்பினை கேள்வி கேட்க கற்றுக்கொடுத்தது.
அறிவு, கடவுளுக்கு அவசிய நிரூபணம் கேட்டது.
வாழ்வின் வலிகள், கடவுள் இல்லையென்று சத்தியம் செய்தது.

வலியின் உச்சத்திலும் வாழ்க்கை தெரிந்த போது,
கடவுள் பற்றி குழப்பம் வந்தது.
மகிழ்வின் துளிகள் பற்றிய போது,
கடவுள் பற்றி தெளிவு வந்தது.
வாழ்வும், மகிழ்வும் புரிந்த போது
கடவுளோடு நட்பு வந்தது !
துளித்துளி வலிகள், சிறகாய் வாழ்வு
காற்றாய் மகிழ்ச்சி ......
புரிதலோடு கடவுள் கலந்தது !
என் புரிதலே என் கடவுள் என்றானது !

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

அரதப்பழசு

இன்று புதிது
நாளை புதிது
எண்ணம் புதிது
வண்ணம் புதிது
புதிது புதிதாய்

புதிது புதிதாய் .....
அரதப்பழசு

வெள்ளி, 8 ஜனவரி, 2010

எண்ணத்துகள்கள் !

எண்ணத்துகள்கள் !
பொழுது போகாத இலக்கியவாதிகளோடு சேர்ந்துகொண்டு,
எல்லா இடத்திலும் திரிகின்றன!
கண்டே தீர கங்கணம் கட்டி அலைகிற விஞ்ஞானிகளோடு
அவை அலைகின்றன!
கடவுளை கண்டதாய் கர்வம் கொண்டலையும் ஞானிகளோடும் கொஞ்சம்  குலவுகின்றன!
வாழ்க்கைப்போரில் தினம் மாயும் மனிதனோடும்
மாயம் செய்கின்றன!
பசிக்கு அலையும் விலங்குகளோடு
வன்முறை காட்டி வனம் சேர்கின்றன
பேசத்தெரியா செடிகொடிகளில்
தொட்டுத்தொட்டே உயிர் வளர்க்கின்றன.

கடவுள் ஏமாந்து போன ஒரு தருணத்தில்,
எல்லோரும், எல்லாமும்
ஒருதுளி உயிரும் மிச்சம் வைக்காமல்
செத்துபோய்விட.........ஹஹஹா....






வயதான மரம் !
வளர்ந்து கொண்டுஇருந்த
ஏதோ ஒரு நாளில், ஒரு நேரத்தில்,
வயதானவர்களை பிடித்துப்போனது !
விவேகம் பிதுங்கும்
தோலின் சுருக்கங்கள்
எப்படியோ கண்ணில் பட்டுவிட்டது !
அன்பு சுடரும்
குழிந்த கண்கள்
தன்னை அடையாளம் காட்டிவிட்டது !
பழுத்த அனுபவம்
"பொல்" லென்ற நரையில்
பளிச்சிட்டு சிரித்தது !
வயதானவர்களை மட்டுமின்றி
வயதாவதும் பிடித்துப்போனது !
முதுமைதான் எத்தனை அழகு !
அழகான இந்த தருணத்தில்,
அருகிருந்தும்
ஆழ்ந்து அறியாமல், மறைந்திட்ட
என் தாத்தா, பாட்டிக்கு
என் அன்பு அஞ்சலி !